சின்னக்குட்டியாரின் யாழ்ப்பாணப் புகையிலை தொடர்பான பதிவு (https://web.facebook.com/permalink.php?story_fbid=pfbid02zLjCoZz2spfADGYDkARq2t3WfXToxUfuSBL2xKJgLGkQQ9i5y5b4MW3Cw1H7Rnaql&id=61563805347421) இக்கரைப் பதிவு. அதாவது யாழ்ப்பாணத்தில் இயங்கிய சங்கம், இங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று முழுமையாகவும் நாமே நம்கதை கூறும் ஒருபக்கப் பதிவு.
இருவேறு நிலங்களைத் தொடர்புபடுத்திய ஒரு விடயத்திற்கு இரண்டு இடத்திலும் காணப்படும் வரலாற்று எச்சங்களைத் தொகுத்துக் கூறுவதலே அதனை முழுமையடையச் செய்யும்.
இந்த இலக்கியப் பதிவினைச் செய்துள்ளவர் இந்திய சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் "காக்கநாடான்". ( https://en.wikipedia.org/wiki/Kakkanadan) காக்கநாடன் மலையாள மொழியில் எழுதியவற்றில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 15 சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுச் சாகித்திய அகாதமியினால் ''யாழ்ப்பாணப் புகையிலை'' என்ற தலைப்பில் 2010ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பின் முதல் சிறுகதையின் தலைப்பு - நூலின் தலைப்பாகவும் வைக்கப்பட்டுள்ளது.
Cover page from : MarinaBooks, Thank You
இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் என்ற ரீதியில் என். செல்வராஜா அவர்களின் நூல் தேட்டம் 16வது தொகுதியில் இந்நூலைப்பற்றிய பதிவும் இடம்பெறுகிறது.( https://noolthettam.com/15999-%e0%ae%af%e0%ae%be%e0%ae.../ ) எதிர்காலத்தில் யாரோ ஒருவர் ''யாழ்ப்பாணப் புகையிலை'' தொடர்பில் ஆய்வு செய்கிறாரெனில் நூல்தேட்டப் பதிவுனூடாக காக்கநாடனின் சிறுகதையையும் சென்றடையும், என். செல்வராஜா Nadarajah Selvarajah அவர்களுக்கு மிக்க நன்றி.
சரி, கதைக்கு வருவோம்.
காக்கநாடனின் மலையாள விபரிப்பு - நிர்மால்யாவின் தமிழாக்கத்தில் யாழ்ப்பாணப் புகையிலை தொடர்பில் காணப்படும் வாசகங்களை முதலில் தருகிறேன்.
பாட்டிக்கு வெற்றிலை போடவேண்டுமென்றால் முதல்தர யாழ்ப்பாணப் புகையிலைதான் வேண்டும்.
முதல் தர யாழ்ப்பாணப் புகையில கொண்டு வரலைன்னா உன்னைத் திரும்பவும் துரத்துவேன் கேட்டுக்க.
புகையிலை வாங்கி வந்து ஒப்படைத்ததும், பாட்டி அதை வாங்கிக் கவனமாகச் சோதிப்பாள். மேலும் கீழும் புரட்டிப் புரட்டிப் பார்ப்பாள். ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை நான்கைந்து முறையாவது முகர்ந்து பார்ப்பாள்.
ஊஹூம் ஊஹூம். அந்த இப்ராஹிம் குட்டிகிட்ட போய்ச்சொல்லு, பாட்டிகிட்ட இந்த வெளையாட்டெல்லாம் வேணாம்னு, அவனைக் கொழந்தைலேர்ந்து பார்க்கிறேன். அவனோட வாப்பா வியாபாரம் தொடங்கறதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். இந்தா இந்தப் கள்ளப் புகையிலையை எடுத்துக்கிட்டுப் போய்க் குடு, இதுக்கு வீரியம் போதாது, செல்லத்தில ஒரு கழஞ்சுகூட இல்ல.
என்னோட புள்ளைக்குத் தெரியுமா?யாழ்ப்பாணப் புகையிலயோட தரம்?இதுக்கு என்ன மணம்!என்ன வீரியம்!என்ன உஷார்!இதோட தரத்தாலேதானே பாட்டி இத்தனை காலமா சாகாம எந்தச் சுகவீனமும் இல்லாம இருக்கேன்?
இதனாலதான் இந்த யாழ்ப்பாணப் புகையில அத்தனை தூரத்திலேர்ந்து வருது, கடல்தாண்டி மறுகரையிலைர்ந்து. இதோட வீரியத்தை அனுபவிச்சா தான் தெரியும். சொல்லிப் புரிய வைக்க முடியாது.இதுக்கு வீரியம் இருக்குதுங்கிறதுக்காக கொழந்தைங்க வெற்றிலை போடக்கூடாது. கன்னமும் இதயமும் துவண்டு போயிடும். கொஞ்சம் பெரியவனான பெறகு தொண்டையும், இதயமும் திடம் வெச்சபிறகு தொடங்கலாம். அப்ப எந்தப் பிரச்சனையுமில்ல.
உன் அப்பனுக்கு வெளிநாடு போக ஆசை. எங்கேன்னு தெரியுமா? இந்தப் புகையில வெளையிற நாட்டுக்கு. நிறையச் சம்பளம் கெடைக்கும்னு அவன் சொல்றான். அந்தக் கதையெல்லாம் வேணாம். புகையில இங்க வந்து சேர்ந்தா போதும். அங்க போய்ப் புகையில பயிர் பண்ண வேண்டிய தேவை எனக்கில்லைன்னேன். உன் அப்பன் அசடு வழிஞ்சான்.
பாட்டி மறைந்து சில காலம் கழிவதற்குள் குட்டிசேகரனின் தந்தை வேலை நிமித்தமாகப் புகையிலை நாட்டுக்குப் போனார். ஓராண்டு கழிந்து ஊருக்குத் திரும்பினார். விடுமுறை முடிந்து மீண்டும் கிளம்பும்போது குட்டி சேகரனையும் அவனது தாயாரையும் அழைத்துப் போனார். அவ்வாறு குட்டிசேகரன் புகையிலைத் தோட்டங்களின் ஊர்க்காரன் ஆனான்.
இனி,
என் சிற்றறிவிற்கு எட்டிய புரிதல்.
பட்டினப்பாலையில் வரும் ''ஈழத்துணவும்.. '' இன்னபிறவும் இரு கரைகளும் தமிழரின் கரைகளாகவிருந்த காலத்துக் கடல்வழி வணிகத்தின் சாட்சி என்றால், பிருத்தானிய இந்தியாவின் நடுக்கூறில் தமிழர்களின் இரண்டு கரைகளையும் இணைத்து நடந்த பாய்க்கப்பல் வணிகக் காலத்தின் சாட்சி இந்த யாழ்ப்பாணப் புகையிலை வணிகம். இலங்கையின் வடபகுதித் துறைமுகங்களூடாக நேரடியாக தென்-இந்தியத் துறைமுகங்களுக்கு இருகரைவாழ் வணிகர்களால் நடத்தப்பட்ட இந்த வணிகம், இருகரைத் தேவைகளைப் பூர்த்திசெய்தது எனலாம்.
Demand & Supply கோட்பாட்டிற்கமைய கூடிய தேவை இருக்குமிடம்நோக்கி வழங்கல் நடைபெறும். மலையாளக் கரைக்குத் தடையில்லாது வழங்கல் நடைபெற வேண்டுமெனில், அதிலும் கூடிய லாபம் கிடைக்கவேண்டுமெனில் குட்டி சேகரனின் அப்பா போன்றோர் ஈழத்துக் கரைகளில் குடியேறி, அங்குள்ள துறைமுகங்களையண்டிய கிட்டங்கிகளைக் குத்தகைக்கு எடுத்து வேண்டியவற்றை உள்ளூர் விலையில் கொள்முதல் செய்து, பாதுகாத்து வைத்து , கேரளத்திற்கு அனுப்பியதை வடபகுதித் துறைமுகங்கள் அறியும், கடல்வழி வணிகத்தில் ஈடுப்பட்டோர் அறிவர். இவ்வாறு இலங்கையின் வடபகுதியில் குடியேறிய கேரளர் நாளடைவில் உள்ளூரில் திருமண பந்தங்களில் ஈடுப்பட்டு, இன்று அவர்கள் முற்றிலும் தமிழர்களாகவே கரைந்துபோயினர் என்றே கூறலாம். அத்தகைய முன்னைக் கேரள பூர்வீகமும், தற்கால ஈழத் தமிழனுமான குட்டிசேகரனின் கதையே மேற்சொல்லப்பட்டது.
கேரளாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து வியாபாரத்தில் ஈடுபடுவதற்குக் காரணம் - ''நிறையச் சம்பளம் கிடைக்கும்'' என்பது இக்கதையிலும் வருகிறது, ஒரு மலையாள எழுத்தாளரின் வாசகம் அது. இதுதவிர யாழ்ப்பாணத்திலிருந்த பல பாடசாலைகளில், கல்லூரிகளில் கேரளர்கள் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர். எஸ். சிவலிங்கராசா Sithamparapilai Sivalingarajh அவர்களின் ''யாழ்ப்பாணத்துக் கல்வி வளர்ச்சியில் இந்திய ஆசிரியர்களின் பங்களிப்பு'' நூலில் சான்றுகள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் காணப்படும் பணிக்கர் தெரு, பணிக்கர் கோயில் போன்றவைகளும் சாட்சிகள்தாம். யாழ்ப்பாணத்தில் ''நிறையச் சம்பளம் கிடைக்கும்'' என்பது இவர்களை ஈர்த்துள்ளது.
''பிருத்தானிய இந்தியா'' இல்லாதுபோய் இரண்டு புதிய நாடுகள் தோன்றித் தமிழர் கரைகளின் வணிகத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தன.
அதிலும் இலங்கை அரசானது இலங்கையின் வடபகுதித் துறைமுகங்கள், பிறதேசங்களுடன் நேரடி வணிகத்தில் ஈடுபடுவதைத் தடைசெய்தது, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற தமிழரின் கடல்வழி வணிகத்தை முடக்கியது.
தமிழர்கள் தங்கள் வணிகத்தினூடாகத் தன்னிறைவு அடைவதை சிங்கள அரசுகள் விரும்புவதில்லை. அதன்காரணமாகவே தமிழ்ப் பிரதேசங்களுக்குத் தனியான நடைமுறைகள், மறைமுகத் தடைகள். இலங்கையில் எந்த மாகாணத்திலும் காணப்படாத ஒன்று வடபகுதிக்கான ''மண்ணெண்ணை பர்மிட்'' என்பது சிறந்த எடுத்துக்காட்டு.
1957ஆம் ஆண்டில் கொழும்பில் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தின் கவனிப்புப் பட்டியலில் இருந்த விடயங்களில் ஒன்று - தமிழர்களின் கடல்வழி வணிகத்தை மீட்டெடுப்பது. ''நெடுங்காலமாக எமது நாட்டவர் இந்தியா, பர்மா முதலிய அயல்நாடுகளுடன் போக்குவரத்துச் செய்த கப்பற் சாதனங்கள் எங்கே? இவை ஏன் மறைந்தன? எம்மைச் சுற்றியுள்ள சிக்கல்களிற் சில இவை. இவற்றை ஆராய்ந்து குறைகளை நிவர்த்திக்க வழிவகைகளைக் காண்பது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பணியும் கடமையும்'' என்று தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தின் முன்னோடி ஆ.வி. மயில்வாகனார் அறிக்கை கூறுகிறது.
முற்போக்கு முகமூடியுடன் இயங்கிய சுயநலப் பித்தர் க. கைலாசபதி துணையுடன் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ் வளாகம் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டதுடன், 1957ஆம் ஆண்டில் இலங்கையின் நிர்வாக சேவையில், சபாநாயகர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் பணியாற்றிய பல தமிழர்கள் இணைந்து உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் அதன் இலக்கை அடையாது அமைதியடைந்தது.